search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை இயக்க திட்டம்"

    தூய்மை இயக்க திட்டம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை விருதுநகர் வரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு திமுகவினர் கருப்புக்கொடி காட்ட உள்ளனர்.#TamilNaduGovernor #BanwarilalPurohit
    விருதுநகர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் செய்து அரசின் திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். மேலும் மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்தையும் தொடங்கி வைத்து வருகிறார்.

    கவர்னரின் இந்த ஆய்வுக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் தூய்மை இயக்க திட்டம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை (11-ந் தேதி) விருதுநகர் வருகிறார்.

    நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் கவர்னர் அங்கிருந்து விருதுநகருக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். முதலில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் விருதுநகருக்கு வரும் அவர் அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு செல்கிறார்.

    தொடர்ந்து தேசபந்து திடலில் தூய்மை பாரத திட்டத்தை கவர்னர் தொடங்கி வைக்கிறார். பின்னர் விருதுநகர் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

    மாலையில் விருதுநகர்- அழகாபுரி ரோட்டில் உள்ள சந்திரகிரி கிராமத்துக்கு செல்லும் கவர்னர் அங்கு தூய்மை பாரத விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு நாளை இரவே கவர்னர் சென்னை புறப்படுகிறார்.

    இதுகுறித்து விருதுநகர் கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், நாளை விருதுநகர் வர உள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் கோரிக்கை மனுக்களை அளிக்க விரும்புவர்கள் காலை 9 மணி முதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    விருதுநகரில் ஆய்வு மேற்கொள்ள வரும் கவர்னரை கண்டித்து நாளை தி.மு.க. சார்பில் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கம் அருகே அவருக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என மாவட்ட செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவித்துள்ளனர்.

    இதனால் கவர்னர் வரும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். #TamilNaduGovernor #BanwarilalPurohit
    ×